அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா: ஒரு இடம், ஐந்து அணிகள் போட்டி
அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா: ஒரு இடம், ஐந்து அணிகள் போட்டி
ADDED : அக் 21, 2025 07:18 AM

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதில் இந்திய பெண்கள் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டி முடிவில் ஆஸ்திரேலியா (9), இங்கிலாந்து (9), தென் ஆப்ரிக்க அணிகள் (8) அரையிறுதிக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் உட்பட ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.
இந்தியா எப்படி
இந்திய பெண்கள் அணி இதுவரை 5 போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளி (ரன் ரேட் 0.526) மட்டும் பெற்று, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்து நியூசிலாந்து (அக். 23), வங்கதேச (அக். 26) அணிகளை சந்திக்க உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
மாறாக ஏதாவது ஒரு போட்டியில் தோற்க நேரிட்டால், 6 புள்ளியுடன், மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
தேறுமா நியூசி.,
நியூசிலாந்து அணி 5 போட்டியில் 1 வெற்றியுடன் 4 புள்ளி எடுத்து 5வதாக உள்ளது. அடுத்து இந்தியா (அக். 23), இங்கிலாந்து (அக். 26) அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் இந்தியாவை பின்தள்ளி, அரையிறுதிக்கு செல்லும். மாறாக ஏதாவது ஒன்றில் தோற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
இலங்கை, வங்கதேச அணிகள் 5 போட்டியில் தலா 2 புள்ளி எடுத்துள்ளன. மீதமுள்ள இரு போட்டிகளில் வெல்லும் அணி 6 புள்ளி பெறும். பின் மற்ற போட்டி முடிவுக்கு ஏற்ப அரையிறுதி வாய்ப்பு தெரியவரும்.