ADDED : அக் 07, 2024 10:42 PM

மைசூரு : தசரா திருவிழாவை பார்க்க, சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர். இவர்களிடம் ஹோட்டல், லாட்ஜ் உரிமையாளர்கள் மனம் போனபடி கட்டணம் வசூலிக்கின்றனர்.
மைசூரில் தசரா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இம்மாதம் 11ம் தேதி ஆயுத பூஜை, 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சிகள், ஜம்பு சவாரியை காண உலகின் பல நாடுகளில் இருந்தும், பெருமளவில் சுற்றுலா பயணியர் வந்துள்ளனர். மைசூரு நகர், புறநகரின் ஹோட்டல், லாட்ஜ்களின் அறைகளில் தங்கி உள்ளனர்.
ஜம்பு சவாரியை பார்ப்பதற்காக, இம்மாதம் 11, 12, 13ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் சுற்றுலா பயணியர் அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 95 சதவீதம் அறைகள் முன்பதிவாகியுள்ளன. மீதமுள்ள அறைகளும் இன்றும், நாளையும் நிரம்பும் வாய்ப்புள்ளது.
சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, ஹோட்டல், லாட்ஜ் அறைகளின் வாடகையை பல மடங்கு அதிகரித்துள்ளனர். சுற்றுலா பயணியரும் வேறு வழியின்றி, அதிகமான கட்டணம் செலுத்தி அறைகளை முன்பதிவு செய்கின்றனர்.
மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:
மைசூரில் ஸ்டார் ஹோட்டல்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. இவற்றில் 10,500 அறைகள் உள்ளன. ஏற்கனவே 95 சதவீதம் அறைகள் முன்பதிவாகியுள்ளன.
இம்முறை தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடுவது, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடப்பது, தொடர் விடுமுறை போன்ற காரணங்களால், சுற்றுலா பயணியர் மைசூருக்கு வருகின்றனர்.
தமிழகம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா என, பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஜம்பு சவாரி நாளன்று, வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருவர். தசரா நிகழ்ச்சிகளுடன், சுற்றுலா தலங்களையும் பார்க்க, குடும்பத்துடன் வருகின்றனர்.
இதற்கு முன்பு தசரா நேரத்தில், அண்டை மாநிலம் கேரளாவில் இருந்து, அதிகமான சுற்றுலா பயணியர் வந்தனர். ஆனால் இம்முறை வயனாடு நிலச்சரிவால், அங்கிருந்து சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.