கன்னடத்தில் பேசும்படி கூறியவரை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்
கன்னடத்தில் பேசும்படி கூறியவரை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்
ADDED : பிப் 05, 2025 09:47 PM

தாசரஹள்ளி; கன்னடத்தில் பேச கூறியதால் உணவு விற்பனை பிரதிநிதி மீது, ஹோட்டல் ஊழியர்கள் தாக்கினர்.
பெங்களூரு, சிக்கசந்திராவை சேர்ந்தவர் நவீன், 25. உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார்.
கடந்த 2ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக, தாசரஹள்ளியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார். உணவை பார்சல் செய்து கொடுக்க, ஹோட்டல் ஊழியர்கள் தாமதப்படுத்தி உள்ளனர்.
இதனால் சீக்கிரம் பார்சலை கொடுக்கும்படி, நவீன் கன்னடத்தில் கூறி உள்ளார். அதற்கு ஹோட்டல் ஊழியர்கள் ஹிந்தியில் பதில் அளித்து உள்ளனர்.
அப்போது, கன்னடத்தில் பேசும்படி நவீன் கூறி உள்ளார். கோபம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அவரை தாக்கினர்.
இதுதொடர்பான காட்சிகள் ஹோட்டலில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. உடனடியாக ஹோட்டலுக்கு சென்ற கன்னட அமைப்பினர், நவீனை தாக்கியவர்களை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து சமாதானம் செய்தனர்.