32,000 ஆசிரியர்களுக்கு நிவாரணம் கிடைத்தது எப்படி?
32,000 ஆசிரியர்களுக்கு நிவாரணம் கிடைத்தது எப்படி?
ADDED : டிச 11, 2025 12:19 AM
: மேற்கு வங்கத்தில், பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, 32,000 ஆசிரியர்களை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பணி நீக்கம் செய்த நிலையில், சி.பி.ஐ., விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ஆசிரியர்களுக்கு தற்போது நிவாரணம் கிடைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2014ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், அதில் தேர்வான, 32,000 ஆசிரியர்கள், 2016ல், மாநில அரசின் துவக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
பின்னடைவு
இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கட்டா உயர் நீதிமன்ற தனி நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், 32,000 ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து, 2023 மே மாதத்தில் உத்தரவிட்டார். இது, மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியது.
ஆளும் திரிணமுல் காங்., அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கொந்தளித்தனர்; போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
'பணியிழந்த ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும்' என நம்பிக்கை அளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, 'தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்' என்றார்.
ஒரே உத்தரவில், 32,000 ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கிய நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தார். தேர்தலில் வென்று எம்.பி.,யும் ஆனார்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மேற்கு வங்க அரசு சார்பில் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதிகள் தபபிரதா சக்ரவர்த்தி, ரீதோபிரதோ குமார் மித்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.
சி.பி.ஐ.,யின் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பணியிழந்த ஆசிரியர்களுக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது.
நிம்மதி
இரு நீதிபதிகள் அளித்த உத்தரவில், 'தனி நீதிபதி அனுமானித்ததை விட முறைகேட்டின் அளவு மிகக் குறைவு என்பது, சி.பி.ஐ., விசாரணையில் நிரூபணமாகி உள்ளது. 32,000 பேரில், வெறும் 96 பேர் மட்டுமே தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
'மேலும், 264 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சிலர் செய்த தவறுக்காக, ஒட்டுமொத்தமாக அனைவரையும் தண்டிப்பது என்பதை ஏற்க முடியாது' எனக்கூறி, 32,000 ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டனர்.
தவறு செய்த குறிப்பிட்ட சிலர் மீது சி.பி.ஐ., அல்லது மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனினும், இரு நீதிபதிகள் உத்தரவு பணி நீக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

