விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரை அடையாளம் காட்டிய கைக்கடிகாரம்!
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரை அடையாளம் காட்டிய கைக்கடிகாரம்!
UPDATED : ஜன 28, 2026 10:23 PM
ADDED : ஜன 28, 2026 01:47 PM

புனே: மஹாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, தனி விமானம் மூலம் மும்பையில் இருந்து புனே மாவட்டம் பாராமதிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தரையிறங்கும் போது, ஓடுபாதையை விட்டு விலகி, விமானம் இரு துண்டுகளாக உடைந்து விபத்துக்குள்ளானது. இதில், துணை முதல்வர் அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அடையாளம் காட்டிய கைக்கடிகாரம்
விமான விபத்துக்குள்ளானதால் தீப்பற்றி எரிந்ததில், பயணித்த அனைவரின் உடல்களும் கருகின. இதனால், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்களை வைத்து தான் அஜித் பவார் உள்ளிடோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
தொடர்ந்து, விமானம் விபத்து நடந்த இடத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, விமானம் விபத்துக்குள்ளானது குறித்து முதற்கட்டமாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு;
முதல் முயற்சி தோல்வி
புனே மற்றும் பாராமதி இடையே நிலவிய கடும் மூடுபனி காரணமாக, குறைந்த பார்வைத்திறன் இருந்தது. இதனால், விமானத்தை ஓடுபாதைக்கு நேராகக் கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
பாராமதி விமான ஓடுபாதை மிகவும் சிறியது. அங்கு விமானங்களைத் தரையிறக்குவதற்கான நவீன வசதிகள் ஏதும் கிடையாது. ஓடுபாதையில் விமானம் நேரடியாக தரையிறங்க முடியவில்லை. மிகப்பெரிய அளவில் சுற்றி வரவேண்டி இருந்தது. இதனால் விமானத்தை தரையிறக்குவதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்தது.
'டேபிள் டாப்'
அதன்பிறகு, 2வது முறையாக விமானம் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, விமானி அவசர கால சிக்னலான 'மே டே' அழைப்பு விடுத்தார்.
டிஜிசிஏவின் கூற்றுப்படி, பாராமதி விமான நிலையத்தின் ஓடுபாதை 'டேபிள் டாப்' அமைப்பைக் கொண்டது. அதாவது, மலை உச்சியிலோ அல்லது சுற்றிலும் பள்ளத்தை கொண்ட ஆபத்தான ஓடுபாதையாகும்.
தரையிறங்குவதற்கு முன்...
தரையிறங்கும் போது, ஓடுபாதையின் விளிம்பிற்கு சென்றதால் விமானம் விபத்துக்குள்ளானது. 100 அடி உயரத்தில் இருந்த போது, விமானம் நிலைதடுமாறியுள்ளது.
ஓடுபாதையை அடைவதற்கு முன்பாக விமானம் தரையில் மோதி வெடித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட தீயில் விமானம் எரிந்து சேதமடைந்துள்ளது. இதனால் பயணித்த யாரையும் காப்பாற்ற முடியாத சூழல் உண்டானது.
விபத்துக்கான காரணம்
விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்திற்கான இறுதி காரணம் டிஜிசிஏ அறிக்கையில் உறுதி செய்யப்படும்.

