மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீர்கள்? 'எல் அண்டு டி' தலைவர் பேச்சால் சர்ச்சை
மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீர்கள்? 'எல் அண்டு டி' தலைவர் பேச்சால் சர்ச்சை
ADDED : ஜன 11, 2025 06:13 AM

புதுடில்லி: “ஞாயிறு எதற்காக விடுமுறை? வீட்டில் மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்?” என, எல் அண்டு டி., நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகிழ்ச்சி
தனியார் நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ, நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையில், கடந்த 80 ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. இதன் தலைவராக எஸ்.என்.சுப்ரமணியன் உள்ளார்.
இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், சுப்ரமணியன் பேசியதாவது:
உங்களை, ஞாயிறு அன்றும் பணி செய்ய வைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
காரணம், நான் ஞாயிறு அன்றும் பணியாற்றுகிறேன். உலகில், நாம் முதல் நிலையில் இருக்க வேண்டுமானால், வாரத்தில் 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.
வீட்டில் இருந்து என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் தான் உங்கள் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவரது இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இவரது பேச்சு, ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விட உற்பத்தித்திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் நச்சுவேலை கலாசாரத்தின் அறிகுறியாக இருப்பதாக, பலர் கருத்து தெரிவித்துஉள்ளனர்.
'இது நவீன யுக அடிமைத்தனத்தை அரங்கேற்றும் முயற்சி' என, சிவசேனா உத்தவ் அணி எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்டனம்
சுப்ரமணியன் வாங்கும் சம்பளத்தையும், சாதாரண ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தையும் ஒப்பிட்டு, பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, எல் அண்டு டி., நிறுவனம் தரப்பில், 'தேச முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பரந்த பார்வையில் சுப்ரமணியன் பேசியுள்ளார்.
ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அசாதாரண வெற்றிகளை பெறுவதற்கு, அசாதாரண முயற்சிகள் தேவை' என, விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி, 'வாரத்துக்கு, 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சுப்ரமணியனும் அதேபோன்ற கருத்தை எதிரொலித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.