வாய் பேசாத, காது கேளாத பெண் உ.பி.,யில் கூட்டு பலாத்காரம்
வாய் பேசாத, காது கேளாத பெண் உ.பி.,யில் கூட்டு பலாத்காரம்
ADDED : ஆக 14, 2025 01:00 AM

லக்னோ:உத்தர பிரதேசத்தில், காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண்ணை பைக்கில் துரத்திச் சென்ற இளைஞர்கள், மாவட்ட நீதிபதி, எஸ்.பி., உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் குடியிருப்பு அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண், இரு தினங்களுக்கு முன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இரவு நேரத்தில் இளம்பெண் தனியாக செல்வதை கண்ட ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் வீட்டில் விடுவதாக கூறி அழைத்தார்.
அதிர்ச்சி அவரை நம்பி அந்த பெண்ணும் பைக்கில் ஏறினார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் தன் நண்பர் களையும் அழைத்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய பெண்ணை, அவர்கள் விடாது நான்கைந்து பைக்குகளில் துரத்திச் சென்றனர். சாலையில் வெறுங்காலில் பயத்துடன் இளம்பெண் ஓடுவது, அந்த வழியில் இருந்த ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் வீட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், குடும் பத்தினர் பதற்றத்துடன் தேடத் துவங்கினர். இறுதியில், ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, புதரில் மயக்கமடைந்த நிலையில் மகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண் தெரிவித்த தகவலின் அடிப்படையில், குற்றவாளிகளை போலீசார் தேடினர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், இருவரை அடையாளம் கண்டு சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
கைது இதைத்தொடர்ந்து, என்கவுன்ட்டர் செய்து இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
பல்ராம்பூர் மாவட்ட நீதிபதி, எஸ்.பி., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் குடியிருப்பு நிறைந்த பகுதியில், இந்த குற்றம் நடந்துள்ளது. மேலும் இளம்பெண் மயங்கிக்கிடந்த இடத்தின் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.