பீஹார் சட்டசபை தேர்தலில் இம்முறை 11 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி
பீஹார் சட்டசபை தேர்தலில் இம்முறை 11 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி
ADDED : நவ 15, 2025 05:32 PM

பாட்னா: பீஹார் சட்டசபைக்கு இம்முறை 11 முஸ்லிம் எம்எல்ஏக்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அமோக வெற்றியுடன் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் முற்றிலும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த முறை எத்தனை சிறுபான்மையின முஸ்லிம் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்ற விவரம் வெ ளிவந்துள்ளது. அதன் படி, இம்முறை மொத்தம் 11 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆகி உள்ளனர்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி, தம் கட்சி சார்பில் 23 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்களில் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் மாநில தலைவர் அக்தருல் இமான், அமூர் தொகுதியில் வென்றார். அதே கட்சியைச் சேர்ந்த தவுசிப் ஆலம், பகதூர்கஞ்ச் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் 4 முஸ்லிம் வேட்பாளர்களை போட்டியிட வைத்தது. அவர்களில் செயின்பூரைச் சேர்ந்த முகமது ஜமான் கான் மட்டும் வென்றார். இத்தனைக்கும் இவர் 2020ல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். பின்னர், ஐக்கிய ஜனதா தளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தில் 18 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 3 பேர் மட்டுமே வென்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் மறைந்த முகமது சஹாபுதினின் மகன் ஒசாமா சாஹிப். இவர் ரகுநாத்பூரில் வென்றுள்ளார்.
21 ஆண்டுகளில் சஹாபுதின் குடும்பத்தில் ஒருவர் எம்எல்ஏவாக வருவது இதுவே முதல்முறை. காங்கிரஸ் வேட்பாளர்கள் கிஷன்கஞ்சில் கம்ரூல் ஹுடா மற்றும் அராரியாவில் அப்துர் ரகுமான் வென்றுள்ளனர்.
கடந்த கால பீஹார் சட்டசபை அரசியல் வரலாற்றில், 2010ம் ஆண்டு 19 முஸ்லிம் எம்எல்ஏக்கள் இருந்தனர். இதுவே 2015ம் ஆண்டில் 24 ஆக இருந்தது. 2020ம் ஆண்டில் 19 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகினர்.

