பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் எப்படி சேரலாம்?: கேரள ஆளும் கூட்டணியில் மோதல்!
பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் எப்படி சேரலாம்?: கேரள ஆளும் கூட்டணியில் மோதல்!
ADDED : அக் 26, 2025 11:19 PM

திருவனந்தபுரம்: கேரளாவில், 'பி.எம்., ஸ்ரீ' எனப்படும், 'பிரதமரின் எழுச்சிமிகு இந்தியாவுக்கான பள்ளிகள்' திட்டம் தொடர்பாக, ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பு கேரளாவில் மார்க்., கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இக்கூட்டணியில், இந்திய கம்யூ., அங்கம் வகிக்கிறது.
தேசிய கல்வி கொள்கையின் கீழ், பி.எம்., ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு பள்ளிகளை தேர்வு செய்து, கல்வியின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முன்மாதிரி பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தை அமல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதை அமல்படுத்தக்கூடாது என்பதில், கூட்டணியின் முக்கிய கட்சியான இந்திய கம்யூ., விடாப்பிடியாக இருந்தது.
இத்திட்டத்துக்கு முதலில் தயக்கம் காட்டிய முதல்வர் பினராயி விஜயன், சமீபத்தில் ஒப்புதல் தெரிவித்தார்.
இதையடுத்து, மாநில அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல், பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கேரள கல்வித்துறை கையெழுத்திட்டது.
'கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெறவே பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைந்துள்ளோம். மாநில கல்வி கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம்' என, கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்தார்.
விமர்சனம் இந்நிலையில், பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததற்காக, மார்க்., கம்யூ., கட்சியை, கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., கடுமையாக விமர்சித்து உள்ளது.
இது குறித்து, இந்திய கம்யூ., மூத்த தலைவர் பிரகாஷ் பாபு நேற்று கூறியுள்ளதாவது:
பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது குறித்து பல முறை பேச முயன்றும், மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் எம்.ஏ. பேபி மவுனம் காத்து வருகிறார். இது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்கள் தேசிய பொதுச் செயலர் டி. ராஜா கூட அவருடன் பேச முயன்றும், அவர் எதுவும் சொல்லாமல் இருப்பது ஏன்-?
பி.எம்., ஸ்ரீ திட்ட விவகாரத்தில் தமிழகத்தை போல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும், இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவை மறுபரிசீலனை செய்வது குறித்தும் பேபியிடம் எடுத்துரைத்தோம்.
எவ்வளவு எடுத்து சொல்லியும், எங்கள் கருத்தை காது கொடுத்து கூட கேட்காமல் அவர் மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில், எங்கள் உறுப்பினர்கள் கூடி ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

