புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற 2 இடங்களில் பிரம்மாண்ட மையம்
புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற 2 இடங்களில் பிரம்மாண்ட மையம்
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:44 PM
புதுடில்லி: குளிர்காலம் தொடங்குவதற்கு முன், ஆனந்த் விஹார் மற்றும் சராய் காலே கான் ஆகிய ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களில், புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் மையங்களை துவக்க, டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லி மாநகரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும் பிரம்மாண்ட மையத்தை, குளிர்காலம் தொடங்குவதற்கு முன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனந்த் விஹார் மற்றும் சராய் காலே கான் ஆகிய ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களில் தலா ஒரு மையம் அமைக்கப்படும். கனரக மற்றும் இலகு ரக வாகனங்களுக்கான பல்வேறு வழித்தட மையங்களாக இது அமைக்கப்படும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், இந்த மையங்களில் பரிசோதிக்கப்பட்டு, புகை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டு மையங்களையும் அமைக்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களுக்கு பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மையங்களில் இருந்து தகுதிச் சான்றிதழ் பெறுகின்றனர். அதேநேரத்தில், தனியார் வாகனங்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே உள்ள சிறிய மையங்களில், புகை கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வாங்கபடுகிறது.
டில்லி மாநகரில், 900 பெட்ரோல் பங்க்குகளில் புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைந்துள்ளன. ஆனால், ஆனந்த் விஹார் மற்றும் சராய் காலே கான் ஆகிய பஸ் நிலையங்களில் அமைக்கப்படும் புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் மையங்கள், மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களின் அமைக்கப்படும் முதல் மையமாக திகழும்.
இந்த இரண்டு மையங்களையும் கடந்து செல்லும் வாகனங்கள், தீவிரமாக கண்காணிக்கப்படும். புகை கட்டுப்பாட்டு மையத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். சரக்கு வாகனங்களுக்காக, டெக்கண்ட் மற்றும் நந்த் நக்ரி ஆகிய இடங்களில் அதிநவீன தானியங்கி பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, ஆண்டுக்கு, 72,000 வாகனங்களை பரிசோதிக்கலாம்.
ஒரு வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையின் அளவு, மோட்டார் வாகன விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருப்பதை, புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் தான் உறுதிப்படுத்துகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் வாயிலாக இயங்கும் வாகனங்களுக்கு கட்டாயமாக புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
