தமிழக எம்.பி.,க்களின் அபார்ட்மென்டில் தீ பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பெரும் பரபரப்பு
தமிழக எம்.பி.,க்களின் அபார்ட்மென்டில் தீ பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பெரும் பரபரப்பு
ADDED : அக் 19, 2025 12:57 AM

டில்லியில் தமிழக ராஜ்யசபா எம்.பி.,க்கள் கிரிராஜன், கனிமொழி சோமு, தர்மர் ஆகியோர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
டில்லியில் எம்.பி.,க்கள் குடியிருப்பதற்கு என, சவுத் அவென்யூ, நார்த் அவென்யூ பகுதிகளில், 'டூப்ளக்ஸ்' எனப்படும் தரை தளம் மற்றும் மாடியில் இரு குடியிருப்புகளை கொண்ட இல்லங்கள் நிறைய உள்ளன.
ஒதுக்கீடு இது போதாது என்பதால், அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டி, அவற்றில் குடியேற எம்.பி.,க்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அந்த வகையில், 'பிடி மார்க்' எனப்படும் பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ளது பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு, ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு இல்லங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று மதியம், 2:00 மணி அளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
பார்லிமென்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள, ஆறு மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பானது, புதிதாக கட்டப்பட்டு, 2020ல் தான் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
பணியாளர்கள் குடிதண்ணீர், மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு, மிகுந்த கண்காணிப்புடன் சுத்தமான வகையில் பராமரிக்கப்படும், மிக மிக பாதுகாப்பு மிகுந்த பகுதி இது.
முழுக்க முழுக்க எம்.பி.,க்களின் குடியிருப்புகள் மட்டுமே பரவிக் கிடக்கும் இங்கு, காவேரி, கங்கா, யமுனா, சரஸ்வதி, ஸ்வர்ண ஜெயந்தி என்ற பெயர்களில், இன்னும் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. அத்துடன் பணியாளர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில், எம்.பி.,க்கள் இங்கு தங்குவதால், இந்தப்பகுதி மிகவும் பிஸியாக இருக்கும். எம்.பி.,க்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடும் நாட்களில், இங்கு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே தங்கியிருப்பர்.
இந்நிலையில், நேற்று இங்கு தீ விபத்து ஏற்பட்டதும், 14 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்ற போதிலும், இங்கிருந்த குடியிருப்புகளில் இருந்த பொருட்கள் பெரிய அளவில் சேதம் அடைந்தன.
அதிர்ச்சி இந்த பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் தான், தமிழக எம்.பி.,க்களான தி.மு.க.,வைச் சேர்ந்த கிரிராஜன், கனிமொழி சோமு மற்றும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தர்மர் ஆகியோர் வசித்து வருகின்றனர். தி.மு.க.,வின் இன்னொரு புதிய எம்.பி.,யான சிவலிங்கத்திற்கும் இங்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் இல்லாத காரணத்தால், இவர்கள் அனைவருமே தமிழகத்தில் தான் தற்போது உள்ளனர். என்றாலும், இவர்களது இல்லங்களில் ஏதும் சேதாரம் ஏற்பட்டுள்ளதா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
காரணம், மிகுந்த பாதுகாப்பு உள்ள இங்கு, இப்படி தீ விபத்து நடந்தது உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனால், போலீசார் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உயர்மட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்
-- நமது டில்லி நிருபர் - .