மனைவிக்கு பேய் விரட்டுவதாக சித்ரவதை செய்த கணவர் கைது மாமனார், மந்திரவாதியும் சிக்கினர்
மனைவிக்கு பேய் விரட்டுவதாக சித்ரவதை செய்த கணவர் கைது மாமனார், மந்திரவாதியும் சிக்கினர்
ADDED : நவ 09, 2025 03:05 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே காதலித்து திருமணம் செய்த மனைவியை பேய் விரட்டுவதாக கூறி தனி அறையில் 10 மணி நேரம் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக கணவர், மாமனார் மற்றும் மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
கோட்டயம் அருகே திருவஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் 58. இவரது மகன் அகில் 26. கூலி தொழிலாளி. கடந்த ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி கணவன் அகில் மற்றும் அவரது தந்தை தாஸ் ஆகியோர் அப்பகுதியில் உள்ள மந்திரவாதி சிவதாஸ் 48, என்பவரிடம் அழைத்துச் சென்றனர்.
இளம்பெண் உடலில் கெட்ட ஆத்மாக்கள் புகுந்துள்ளதாகவும், அதை விரட்டுவதற்கு வீட்டில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் ஒரு அறையில் 10 மணி நேரத்திற்கு மேல் அடைத்து வைத்து மது, பீடி குடிக்க வைத்தும், உடலில் சூடு போட்டும், அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதையறிந்த பெண்ணின் பெற்றோர் திருவஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அகில், தாஸ் மற்றும் மந்திரவாதி சிவதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.

