மனைவியின் தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்து சென்ற கணவர்
மனைவியின் தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்து சென்ற கணவர்
ADDED : ஜூன் 08, 2025 12:36 AM

பெங்களூர: காதலித்து திருமணம் செய்த மனைவியை வெட்டிக் கொன்று, தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், ஹெப்பகோடியில் வசித்தவர் மானசா, 26. ஹென்னாகரா அருகில் காசநாயகனஹள்ளியில் வசிப்பவர் சங்கர், 28. இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள், சந்தாபுரா அருகில் உள்ள ஹீலலிகா கிராமத்தில் வசித்தனர்.
சங்கர் தனியார் தொழிற்சாலையிலும், மானசா தனியார் நிறுவனத்திலும் பணியாற்றினர். மானசாவுக்கு முகிலன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது; நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கர் இரவு ஷிப்ட் பணிக்கு செல்லும்போது, முகிலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் மானசா.
ஜூன் 3ம் தேதி பணிக்குச் சென்றபோது, ''இன்றிரவு வீட்டுக்கு வர முடியாது; மறுநாள் வருவேன்,'' என, சங்கர் கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் பணி முடிந்துவிட்டதால், நள்ளிரவே வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் முகிலனுடன், மானசா இருந்ததை பார்த்து கோபம் அடைந்தார்.
முகிலன் தப்பியோடிவிட்டார். மானசா மன்னிப்பு கேட்டார். இதை ஏற்க மறுத்த சங்கர், 'இனி நீ எனக்கு தேவையில்லை; கள்ளக்காதலனுடன் சென்றுவிடு' என, கூறி வீட்டை விட்டு விரட்டி அடித்தார்.
இரண்டு நாட்களாக 'பேயிங் கெஸ்ட்' முறையில் தங்கியிருந்த மானசா, அவ்வப்போது வீட்டுக்கு வந்து, சங்கரிடம் கெஞ்சிப் பார்த்தார். அதே போன்று, நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு வந்தார்.
அவரை பார்த்ததும், சங்கர் திட்டி விரட்டினார்; மானசா செல்ல மறுத்தார். இருவருக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது.
ஏற்கனவே குடிபோதையில் இருந்த சங்கர், மனைவியின் பேச்சால் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். அரிவாளை எடுத்து மனைவியை வெட்டிக் கொலை செய்தார். பின் அவரது தலையை துண்டித்து, கவரில் போட்டார்.
நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி அளவில், துண்டித்த தலையுடன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் சங்கர் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றார்.
வழியில் சந்தபுரா - ஆனேக்கல் சாலையில் ரோந்து சென்ற போலீசார், அவரது சட்டையில் இருந்த ரத்தக்கறைகளை பார்த்து, சங்கரை நிறுத்தினர்.
மனைவியை கொலை செய்து, தலையுடன் போலீசில் சரணடைய செல்வதாக சங்கர் கூறியதைக் கேட்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குச் சென்று தலையில்லா சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப் பதிவு செய்து, சங்கரை போலீசார் கைது செய்தனர்.