மனைவியை சுட்டு கொன்று ஆசிட் குடித்து கணவர் தற்கொலை
மனைவியை சுட்டு கொன்று ஆசிட் குடித்து கணவர் தற்கொலை
ADDED : ஜன 19, 2025 12:40 AM

தட்சிண கன்னடா,
கர்நாடகாவில் குடிபோதையில் சண்டை போட்டு, மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, ரப்பர் ஆசிட்டை குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் நெல்லுார்கெம்ரஜே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திர கவுடா, 54. இவரது மனைவி வினோதினி குமாரி, 44.
மதுவுக்கு அடிமையான ராமசந்திர கவுடா, தினமும் குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை போடுவார்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். வீட்டிற்கு வந்து அவர், சாப்பிட்டுள்ளார். பின், தன் பெற்றோரிடமும், மனைவியிடமும் சண்டை போட்டுள்ளார்.
இதனால் அவரது பெற்றோரும், மனைவியும், வீட்டின் பின்னால் கட்டி வரும் புதிய வீட்டில் உறங்க சென்றுவிட்டனர்.
அங்கும் சென்ற ராமசந்திர கவுடா, மனைவியுடன் சண்டை போட்டார். அப்போது அவர்களின் மூத்த மகன் பிரசாந்த், தாய்க்கு ஆதரவாக பேசினார்.
இதனால் கோபம் தலைக்கேறிய ராமசந்திர கவுடா, தன்னிடம் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, மகனை மிரட்டினார். இதை, அவரது மனைவி வினோதினி குமாரி தடுத்தார்.
இந்த வேளையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, வினோதினி உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த ராமசந்திர கவுடா, விவசாயத்துக்கு பயன்படுத்தும் 'ரப்பர் ஆசிட்'டை குடித்ததில், உயிரிழந்தார்.
கொலை தொடர்பாக விசாரிக்கும் போலீசார், ராமசந்திர கவுடா துப்பாக்கிக்கு லைசென்ஸ் பெற்று உள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.