8 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்
8 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்
ADDED : ஏப் 15, 2025 04:41 AM
விசாகப்பட்டினம் : ஆந்திராவில், குடும்ப தகராறில் எட்டு மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அனுஷா, 27, ஞானேஷ்வர் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பி.எம். பாலேம் பகுதியில் உள்ள உடா காலனியில் இருவரும் வசித்து வந்தனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வந்தது.
அதே சமயம், எட்டு மாத கர்ப்பமாக இருந்த அனுஷாவுக்கு தேவையானவற்றையும் ஞானேஷ்வர் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அனுஷா மற்றும் ஞானேஷ்வர் இடையே நேற்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது.
நிதானமாக துவங்கிய வார்த்தைப் போர் ஒரு கட்டத்தில் வேகமெடுக்க, வீட்டில் இருந்த கத்தியால் அனுஷாவை ஞானேஷ்வர் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், கர்ப்பிணியான அனுஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அனுஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஞானேஷ்வரை கைது செய்தனர்.