ADDED : ஏப் 03, 2025 07:24 AM
ஹைதராபாத் : ஹைதராபாத் பல்கலை வளாகம் அருகே உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் மீண்டும் இன்று விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், அதுவரை எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது என தெலுங்கானா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில தலைநகரில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கு சொந்தமான இடத்தில், 400 ஏக்கரை கையகப்படுத்தியுள்ள அரசு, அந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க உள்ளது.
இதற்கு, பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்களில் ஒருவரின் வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி ஆஜராகி, ''தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது வன பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை. இக்கட்டுமான பணி காரணமாக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
''எனவே, அத்திட்டத்திற்கு நிலம் ஒதுக்கிய அரசாணையை ரத்து செய்வதுடன், அப்பகுதியில் கட்டுமான பணி மேற்கொள்ள உடனே தடை விதிக்க வேண்டும்,'' என, கேட்டுக்கொண்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கின் விசாரணை இன்றும் தொடரும் எனவும், அதுவரை நிலத்தில் எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் தெலுங்கானா அரசுக்கு உத்தரவிட்டனர்.

