ADDED : ஜூலை 18, 2026 06:27 AM

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வேயில் அடுத்த கட்ட தொழில்நுட்பமாக, ஹைட்ரஜன் ரயில் இயக்கத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக, முதல் ஹைட்ரஜன் ரயிலில், அனைத்து கட்ட சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்து, பாதுகாப்பு ஆணையரிடம் உரிய ஒப்புதலை பெற்று, இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில், 10 பெட்டிகள் இருக்கும்.
ஒவ்வொரு பெட்டியிலும், 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின், 1,200 குதிரை திறன் உடையது. அதிகபட்சமாக மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் செல்லும். தற்போது, ஹைட்ரஜன் ரயிலுக்கான எரிபொருள் நிரப்பும் வசதி, ஜிந்த் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 350 கி.மீ., துாரம் வரை இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஹைட்ரஜன் ரயில் எப்படி ஓடுகிறது?
★ ஹைட்ரஜன் வாயு உயரழுத்தத்தில் சிறப்பு தொட்டியில் நிரப்பப்படுகிறது
★ ஹைட்ரஜன் வாயு தொட்டியில் இருந்து, எரிபொருள் செல்லுக்கு அனுப்பப்படுகிறது
★ எரிபொருள் செல்லில், ஹைட்ரஜன் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து, மின்சாரத்தையும், தண்ணீரையும் உருவாக்குகிறது
★ இந்த வேதியியல் வினையின் வாயிலாக, மின்சாரம் உருவாகிறது. இப்படி உருவாகும் மின்சாரத்தின் ஒரு பகுதி, பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் அது பயன்படுத்தப்படுகிறது
★ எரிபொருள் செல் மற்றும் பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மின்மோட்டாரை இயக்குகிறது. இதுவே ரயிலை முன்னோக்கி நகர்த்துகிறது
★ வெளியேறும் கழிவு பெரும்பாலும் தண்ணீர் மட்டுமே என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, உகந்ததாக இருக்கும்.
