'வெளியில் சொல்ல வெட்கமாயிருக்கு': டில்லி குறித்து ஜெய்சங்கர் கருத்து
'வெளியில் சொல்ல வெட்கமாயிருக்கு': டில்லி குறித்து ஜெய்சங்கர் கருத்து
ADDED : பிப் 03, 2025 06:44 AM

புதுடில்லி : ''டில்லியில் உள்ள மக்களுக்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்த உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறேன். வெளியில் சொல்லவே வெட்கமாக இருக்கு,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபைக்கு, 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், டில்லியில் நடந்த தென் மாநிலத்தவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக டில்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தராமல் புறக்கணித்துள்ளது. இங்குள்ள மக்களுக்கு வீடு கிடைப்பதில்லை.
சமையல் காஸ் கிடைப்பதில்லை. குடிநீர் முறையாக கிடைப்பதில்லை. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின்கீழ் மருத்துவ வசதி கிடைக்கவில்லை.
இவ்வாறு, மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் இங்கு செயல்படுத்துவதற்கு ஆம் ஆத்மி மறுத்து வந்துள்ளது.
இதனால், டில்லி மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்கவில்லை.
நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, நம் நாட்டின் தேசிய தலைநகரில் இப்படி ஒரு நிலைமை இருப்பதை சொல்ல முடியுமா? அதனால், உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறேன். இங்குள்ள நிலைமையை வெளியே சொல்ல வெட்கமாக உள்ளது.
உங்களுக்கான உரிமைகளை டில்லி அரசு வழங்காமல் மறுத்துள்ளது. வரும் 5ம் தேதி நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

