'உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்' சிவராஜ் குமார் நெகிழ்ச்சி
'உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்' சிவராஜ் குமார் நெகிழ்ச்சி
ADDED : ஜன 02, 2025 05:47 AM

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் சிவராஜ்குமார், தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், வீடியோ வெளியிட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் மறைந்த ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார். புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவருக்கு, டிச., 24ல் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த பின், அங்கிருந்தவாறே நேற்று அவரும், அவரது மனைவியும் ஒன்றாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் சிவராஜ் குமார் பேசியதாவது:
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். என் உடல் நிலையை பொருட்படுத்தாமல், படப்பிடிப்பில் பங்கேற்றேன். அப்போது 'கீமோ' சிகிச்சை எடுத்துக் கொண்டேன். '45' திரைப்பட சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்ததற்கு, ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மாவுக்கு தான் பாராட்டு செல்ல வேண்டும்.
அறுவை சிகிச்சை நாள் நெருங்க நெருங்க எனக்குள் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், என் ரசிகர்கள், நண்பர்கள், சக நடிகர் - நடிகையர்கள், பால்ய நண்பர்கள் எனக்கு தைரியம் அளித்தனர்.
டாக்டர்களும், செவிலியர்களும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவியை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
சில மாதங்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன் பின் பழையபடி நீங்கள் செயல்படலாம் என்று கூறியுள்ளனர். எனவே, ஓய்வுக்கு பின், முன்பை விட உற்சாகத்துடன் படப்பிடிப்பில் பங்கேற்பேன். பழையபடி நடனம், சண்டை காட்சியில் உங்களை மகிழ்விப்பேன். உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி, அவரின் வீடியோ வெளியானதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
2_DMR_0015
வீடியோவில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிவராஜ் குமார், அவரது மனைவி கீதா - நமது நிருபர் .

