'என்னால் போட்டியிட முடியாது' பா.ஜ., வேட்பாளர் திடீர் விலகல்
'என்னால் போட்டியிட முடியாது' பா.ஜ., வேட்பாளர் திடீர் விலகல்
ADDED : மார் 04, 2024 02:57 AM

கோல்கட்டா : மேற்கு வங்கத்தின் அசன்சால் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி பாடகரும், நடிகருமான பவன் சிங், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என பின்வாங்கியுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சி தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது.
மேற்கு வங்கத்தின் அசன்சால் தொகுதி வேட்பாளராக, போஜ்புரி பாடகரும், நடிகருமான பவன் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதியில், திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த நடிகர் சத்ருஹன் சின்ஹா எம்.பி.,யாக உள்ளார்.
இந்நிலையில், பாடகர் பவன் சிங் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'அசன்சால் தொகுதி வேட்பாளராக என் பெயரை அறிவித்த பா.ஜ., தலைமைக்கு நன்றி. ஆனால், சில காரணங்களால் தேர்தலில் என்னால் போட்டியிட இயலாது' என குறிப்பிட்டு உள்ளார்.
திடீர் விலகலுக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.
இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், 'பவன் சிங்கின் பாடல்கள் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிப்பவை. பெண்கள் மேம்பாடு குறித்து பேசும் பா.ஜ., அவருக்கு சீட் அளித்துள்ளது' என, திரிணமுல் காங்., தலைவர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில், பவன் சிங் பின்வாங்கியுள்ளதை திரிணமுல் காங்., கேலி செய்துள்ளது.
'தேர்தலுக்கு முன்னதாகவே, அசன்சால் தொகுதியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டனர்' என, அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

