காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் விமானப்படை வீரர்களை சுட்டதை பார்த்தேன்: 35 ஆண்டுக்கு பின் முன்னாள் வீரர் சாட்சியம்
காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் விமானப்படை வீரர்களை சுட்டதை பார்த்தேன்: 35 ஆண்டுக்கு பின் முன்னாள் வீரர் சாட்சியம்
ADDED : நவ 23, 2025 11:11 PM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரை அடுத்த புறநகர் பகுதியான ராவல்போராவில், 1990 ஜன., 25ம் தேதி முகாமுக்கு செல்ல பஸ்சுக்காக விமானப்படை வீரர்கள் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில், 'ஸ்குவாட்ரன்' லீடர் ரவி கன்னா உட்பட நான்கு பேர் பலியாகினர்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திஹார் சிறை இந்த தாக்குதலில், ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தலைமையிலான பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது.
யாசின் மாலிக் உட்பட ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு, ஜம்முவில் உள்ள தடா எனப்படும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பாக போ ராடி வந்த யாசின் மாலிக்கின் விடுதலை முன்னணி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அவர் கைது செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார். பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட யாசின் மாலிக்குக்கு, டில்லி சிறப்பு நீதிமன்றம், 2022ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, டில்லி திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த சூழலில், விமானப்படை வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு ஜம்மு - காஷ்மீரின் தடா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நம் விமானப்படையின் முன்னாள் வீரர் ஒருவர், தாக்குதல் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
விசாரணை அதில், 'ராவல்போராவில் நான்கு விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்ட போது, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களில் யாசின் மாலிக்கும் ஒருவர்.
'நம் விமானப்படை வீரர்களை அவர் இரக்கமின்றி கொன்றார். என் சாட்சியம், இந்த வழக்கு விசாரணையை வலுப் படுத்தும் என நம்புகிறேன். நீதி தாமதமாகலாம்; மறுக்கப்படக்கூடாது' என தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மேலும் இருவரை, முன்னாள் விமானப்படை வீரர்கள் அடையாளம் காட்டினர். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யாசின் மாலிக்குக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு மரண தண்டனை கோரிய வழக்கை, அடுத்த ஆண்டு ஜன., 28ல் விசாரிக்க டில்லி சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

