முஸ்லிம் வளர்ச்சியை தடுப்பதாக கூறுவதா? மதகுரு அர்ஷத் மதானிக்கு பா.ஜ., கண்டனம்
முஸ்லிம் வளர்ச்சியை தடுப்பதாக கூறுவதா? மதகுரு அர்ஷத் மதானிக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : நவ 23, 2025 11:13 PM

புதுடில்லி: 'இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அவர்களின் வளர்ச்சியை தடுப்பதில் அரசு குறியாக இருக்கிறது' என குற்றஞ்சாட்டிய ஜாமியத் உலமா -- இ- - ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானிக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், மவுலானா அர்ஷத் மதானி பேசியதாவது:
முஸ்லிம்கள் பயனற்றவர்களாக ஆகிவிட்டதாக உலகம் நினைக்கிறது; ஆனால், இதை நான் நம்பவில்லை.
சிறை தண்டனை அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மம்தானி பதவி வகிக்கிறார். பிரிட்டனின் லண்டன் மேயராக சாதிக் கான் உள்ளார்.
உலகளவில் உயர் பதவிகளில் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படி இல்லை. இங்கு எல்லாம் தலைகீழாக உள்ளது; முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில், பல்கலை துணைவேந்தராகக் கூட ஒரு முஸ்லிமால் ஆக முடியாது. அப்படியே ஆனாலும், சமாஜ்வாதி தலைவர் அசம் கானை போல அவரும் சிறையில் அடைக்கப்படுவார்.
அல் பலாஹ் பல்கலை யில் தற்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். முஸ்லிம்கள் ஒருபோதும் தலைநிமிரவே கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பா.ஜ., மூத்த தலைவர் யாசர் ஜிலானி நேற்று கூறியதாவது:
நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மவுலானா அர்ஷித் மதானி ஈடுபட்டுள்ளார். ஒருபுறம், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை நன்றாக இல்லை எனக் கூறுகிறார்.
மறுபுறம், உயர் பதவிகளில் முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறுகிறார். லண்டன் மேயர் சாதிக் கான், நியூயார்க் மேயர் மம்தானி ஆகியோருடன், அசம் கான், அல் பலாஹ் பல்கலை நிறுவனரை எந்த வகையில் அவர் ஒப்பிடுகிறார்?
அல் பலாஹ் பல்கலை நிறுவனர் ஒரு குற்றவாளி. டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளது. இது குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. அசம் கானும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் சிறை தண்டனை அனுபவிக்கிறார்.
பாகுபாடு மத்திய பா.ஜ., அரசை பொறுத்தவரை, அனைவரையும் ஒரே தட்டில் வைத்து தான் பார்க்கிறது; எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை.
சிறுபான்மையினர் என்ற போர்வையில் அரசின் மானியங்களை பெற்ற மவுலானா அர்ஷித் மதானி, அந்த சமூகத்தினருக்காக எதையுமே செய்யவில்லை. இந்தியாவை விட முஸ்லிம்களுக்கு சிறந்த இடம் இருக்க முடியாது; ஹிந்துக்களை விட சிறந்த சகோதரர்களும் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

