ADDED : நவ 03, 2024 11:31 PM

ராம்நகர்; ''என் வலியை மக்களிடம் சொல்லி கண்ணீர் விட்டேன். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை,'' என சென்னப்பட்டணா ம.ஜ.த., - பா.ஜ., வேட்பாளர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணாவில் அவர் அளித்த பேட்டி:
தீபாவளி பண்டிகையாக இருந்தாலும், இரு கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வருகிறது. இம்முறை மக்கள் என்னை ஆதரிப்பர்.
சென்னப்பட்டணா தொகுதிக்கு என் பெயரை அறிவித்தவர் எடியூரப்பா. எனக்காக கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா பிரசாரம் செய்தாக தெரிவித்தார். ஆனால், அவரது உடல் நலம் சரியில்லாததால் வரமுடியவில்லை.
ராமநகர் மாவட்ட மக்களுடன் பிரிக்க முடியாத உறவு உள்ளது. வளர்ச்சி குறித்து அவர்களிடம் நம்பிக்கை வைத்து ஓட்டு கேட்டுள்ளோம்.
நான் வேண்டுமென்றே கண்ணீர் விடவில்லை. என் வலியை மக்களிடம் சொல்லி கண்ணீர் விட்டேன். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. என் தோல்விக்கு எனது பெற்றோரே காரணம் என்று காங்கிரசார் கூறுகின்றனர். 2019 தேர்தலில் எனது நிலைக்கு யார் காரணம் என்று மாநில மக்களுக்கு தெரியும்.
கூட்டணி தர்மத்தை காக்காமல் தோற்கடித்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். இதை அவர்கள் சுயபரிசோதனை செய்யட்டும். எனது தோல்விக்கு யாரும் காரணமில்லை. மாண்டியா, ராம்நகர் மக்கள் அன்பு கொடுத்துள்ளனர். காங்கிரசார் என்ன பேசுகின்றனர் என்பதற்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.