சீட்டு நிறுவன மோசடியில் நானும் பாதிக்கப்பட்டேன்: ஒடிசா முதல்வர் வெளிப்படை
சீட்டு நிறுவன மோசடியில் நானும் பாதிக்கப்பட்டேன்: ஒடிசா முதல்வர் வெளிப்படை
ADDED : டிச 24, 2024 05:55 PM

புவனேஸ்வர்: 'சீட்டு நிறுவன மோசடியில் நானும் பாதிக்கப்பட்டேன். பணத்தை திரும்பப் பெற முடியவில்லை,' என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி கூறினார்.
புவனேஸ்வரில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தின விழா, இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல்வர் மோகன் சரண் மாஜி கலந்து கொண்டு பேசினார். தேசிய நுகர்வோர் தின விழாவில் முதல்வர் மோகன் சரண் மாஜி பேசியதாவது:
நானும் சிட் பண்ட் மோசடிகளுக்கு ஆளானேன். 1990 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் இரண்டு நிறுவனங்கள் என்னை ஏமாற்றிவிட்டன. பணத்தை மீட்பதற்கான செயல்முறை மிக நீண்டதாக இருந்ததால், தனது பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை.
நிறுவன முகவர்களின் இனிமையான பேச்சுக்களால் தான் ஈர்க்கப்பட்டு, சில திட்டங்களில் டிபாசிட் செய்ய பணம் ஏற்பாடு செய்தேன். ஆனால், முதிர்வு காலம் வந்தபோது, பணம் டிபாசிட் செய்யப்பட்ட நிறுவனங்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில்,நுகர்வோரை ஏமாற்றுவதை தடுக்க, மத்திய அரசு விதிமுறைகளை வகுத்து பலப்படுத்தியதால் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மக்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை பாதுகாக்க வேண்டுமெனில் மோசடி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.