அன்னை தெரசா ஆசிரமத்தில் இருந்தேன்; பிரியங்கா சொல்வதை கேளுங்க!
அன்னை தெரசா ஆசிரமத்தில் இருந்தேன்; பிரியங்கா சொல்வதை கேளுங்க!
UPDATED : அக் 28, 2024 08:11 PM
ADDED : அக் 28, 2024 08:07 PM

வயநாடு: டில்லியில் உள்ள அன்னை தெரசா ஆசிரமத்தில் ஆற்றிய சேவைகள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி காங்., வேட்பாளருமான பிரியங்கா பேட்டி அளித்து உள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா சமீப நாட்கள் வரை காங்கிரசுக்கு ஆதரவாகவும், சகோதரர் ராகுலுக்கு ஆதரவாக மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது, ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு தொகுதியில் நவ.,13ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களமிறக்கப்பட்டு உள்ளார்.
அங்கு நேற்று பிரசாரத்தை துவக்கிய பிரியங்கா கூறியதாவது: 1991ம் ஆண்டு எனது தந்தை ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபோது எனது வயது 19. அப்போது, அன்னை தெரசா எனது தாயார் சோனியாவை சந்திக்க வீட்டிற்கு வந்தார். காய்ச்சல் காரணமாக எனது அறையில் நான் படுத்து இருந்தேன். அங்கு வந்த தெரசா, தந்தை இறந்ததால், எனக்கு உள்ள கவலையையும், பிரச்னையையும் புரிந்து கொண்டார். அப்போது, தன்னுடன் வந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்தார்.
நானும், டில்லியில் உள்ள அவரது ஆசிரமத்தில் இணைந்து பணியாற்றினேன். இந்த விஷயத்தை தற்போது முதல்முறையாக வெளியில் கூறுகிறேன். அங்கு பாடம் கற்றுக் கொடுப்பது, கழிவறைகளை தூய்மைப்படுத்துவது, பாத்திரம் கழுவுவது, குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வது ஆகிய வேலைகள் எனக்கு கொடுக்கப்பட்டன. அதனை செய்ததன் மூலம் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் வேதனையை புரிந்து கொண்டதுடன், சேவை என்றால் என்ன எனவும் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு சமுதாயமாக எப்படி உதவ முடியும் என்பதை நான் உணர்ந்த தருணம் அது.
தற்போது மக்களின் தேவை என்ன என்பது குறித்து புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு ஆரம்பம்தான். உங்களை வந்து சந்திக்கவும், உங்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும் விரும்புகிறேன். எனது கடமை என்ன என்பதையும் புரிந்து கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

