மாண்டியாவிலேயே போட்டியிடுவேன்! எம்.பி., சுமலதா அம்பரிஷ் திட்டவட்டம்
மாண்டியாவிலேயே போட்டியிடுவேன்! எம்.பி., சுமலதா அம்பரிஷ் திட்டவட்டம்
ADDED : மார் 21, 2024 03:37 AM

பெங்களூரு: “மாண்டியாவை தவிர, வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடமாட்டேன்,” என, மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரிஷ் தெரிவித்தார்.
பெங்களூரின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது:
நான் அரசியல் செய்தால், அது மாண்டியாவில் மட்டும்தான். இதை பா.ஜ., மேலிடத்திடம் திட்டவட்டமாக கூறியுள்ளேன். மேலிடம் எனக்கு சாதகமான பதிலை அளித்துள்ளது. காத்திருக்கும்படி கூறியுள்ளனர்.
நான் சிக்கபல்லாபூரில் போட்டியிடமாட்டேன். மாண்டியாவில் மட்டுமே போட்டியிடுவேன் என, நான் ஏற்கனவே கூறினேன். அதில் உறுதியாக இருப்பேன். என்னை பா.ஜ., மேலிடம், கவுரவத்துடன் பார்க்கிறது. 'கட்சியிலேயே இருக்க வேண்டும்' என, கூறினர்.
'மாண்டியா சீட் இன்னும் முடிவாகவில்லை' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார். எனக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர், தேசிய தலைவர் ஆலோசித்து முடிவு செய்வர்.
என்னை அழைத்து பேசும்படி, பிரதமரே கூறியதால் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, என்னை டில்லிக்கு அழைத்திருந்தார். எனவே அங்கு சென்று வந்தேன். என்ன முடிவு செய்கின்றனர் என, பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.

