உரிய காலத்தில் அரசு பங்களாவை காலி செய்து விடுவேன்: சொல்கிறார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்
உரிய காலத்தில் அரசு பங்களாவை காலி செய்து விடுவேன்: சொல்கிறார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்
ADDED : ஆக 08, 2025 09:11 AM

புதுடில்லி: ''நவம்பர் மாதம் ஓய்வு பெறும் நேரத்தில் எனக்கு பிடித்தமான வீடு கிடைக்கவில்லை என்றாலும், விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அரசு எனக்கு வழங்கிய அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்வேன்'' என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 8, 2024 அன்று ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தை கடந்த பிறகும், தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை காலி செய்யவில்லை என உச்சநீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. சர்ச்சை கிளம்பிய நிலையில் சந்திரசூட் தனது அரசு இல்லத்தை காலி செய்தார்.
முன்னதாக அவர், உடல் நலம் குன்றிய தன் மகள்களுக்கு ஏற்ற வகையிலான வீடு ஏற்பாடு செய்வது கடினமாக இருந்ததால், அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதை நீட்டித்ததாக கூறியிருந்தார். இந்நிலையில் டில்லியில் நீதிபதி சுதன்ஷு துலியாவுக்கு விடைபெறும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது:
நீதிபதி துலியா உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை எனக்குத் தெரியும். அவருக்கு எனக்கும் அதற்கும் முன் தொடர்பு கிடையாது. அவர் மிகவும் அன்பான மனிதர், நீதித்துறைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். நீதித்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்.
ஓய்வு பெற்றவுடன் உடனடியாக தனது அரசு இல்லத்தை காலி செய்யும் நீதிபதிகளில் ஒருவராக அவர் இருப்பார். உண்மையில் அது ஒரு அரிதான விஷயம், நான் இதைச் செய்யக்கூடிய நிலையில் இருப்பேன், ஏனென்றால் நவம்பர் 24ம் தேதி வரை எனக்கு மாற்று வீட்டைக் கண்டுபிடிக்க நேரம் கிடைக்காது.
ஆனால் விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட நேரம் எதுவோ, அதற்கு முன்பு நான் காலி செய்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு கவாய் பேசினார்.