ஜார்க்கண்ட் மதுபான கொள்கை முறைகேடு : ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
ஜார்க்கண்ட் மதுபான கொள்கை முறைகேடு : ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
ADDED : மே 21, 2025 02:09 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே. சவுபோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2022ல் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை, மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அப்போது கலால் துறை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். , அதிகாரி வி.கே.சவுபே, இணைச்செயலர் கஜேந்திர சிங் உட்பட மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் என பலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வி.கே.சவுபே, கஜேந்திர சிங், மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் கலால்துறை செயலராக இருந்த வி.கே. சவுபேவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஜூன் 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பிஸ்ராமுண்டா சிறையில் அடைத்தனர்.
1999-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரான வி.கே. சவுபே எனப்படும் வினாய்குமார் சவுபே, மத்திய அரசின் பல்வேறு உயர்பொறுப்புகளிலும், ஜார்க்கண்ட் மாநில முதல்வரின் செயலராகவும் பணியாற்றியவர்.

