'அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்காது'
'அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்காது'
ADDED : டிச 20, 2024 05:36 AM

பெலகாவி,: ''அம்பேத்கர் மட்டும் இந்த மண்ணில் பிறக்காமல் இருந்திருந்தால், எனக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைத்து இருக்காது,'' என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அம்பேத்கர் பற்றிய பா.ஜ., கட்சியின் உள்ளத்திற்குள் இருக்கும் கருத்தை வெளிப்படையாக பேசியதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எனது வாழ்த்துகள்.
நான் பேசிய வார்த்தை திரிக்கப்பட்டது; அம்பேத்கர் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது என்று அமித்ஷா கூறுவார். பிரதமர் நரேந்திர மோடி, தனது அன்பு நண்பரை காப்பாற்ற நீண்ட அறிக்கை வெளியிடுவார். இதை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். அமித்ஷா கூறிய வார்த்தைகளில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பா.ஜ., அம்பேத்கரை வெறுக்க முக்கிய காரணமே அவரின் அரசியல் சாசனம் தான். இது நடைமுறைக்கு வரும் வரை ஜாதி, பாலின பாகுபாடு இருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மீது நம்பிக்கை கொண்ட அம்பேத்கர் அரசியல் சாசனத்தை வழங்கினார்.
அரசியல் அமைப்பை பா.ஜ.,வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., ஏன் நிராகரித்தது. ஹெக்டேவார், கோல்வால்கர், சாவர்க்கர் ஆகியோர் அரசியலமைப்பிற்கு எதிராக கூறிய கருத்துகள் அனைத்தும் வரலாற்றின் பக்கத்தில் உள்ளன.
அம்பேத்கர் எனக்கு போதை இல்லை. நிலையான நினைவு. நம் மூச்சிருக்கும் வரை, இந்த பூமியில் சூரியன் -- சந்திரன் இருக்கும் வரை, அம்பேத்கரின் நினைவு இருக்கும். நீங்கள் அவரை எவ்வளவு இகழ்கிறீர்களோ, அதற்கு மேல், நாங்கள் அவரை ஒளிர செய்கிறோம்.
அமித்ஷாவின் முதுகிற்கு பின்னால் அமர்ந்திருப்பவர்கள், அவரது திமிர் தனமான வார்த்தைகளை கண்டு ஆரவாரம் செய்திருக்கலாம். கோடிக்கணக்கான மக்கள் இன்று உங்களை கண்டிக்கின்றனர்.
அம்பேத்கர் என்ற மனிதர் இந்த மண்ணில் பிறக்காமல் இருந்திருந்தால், எனக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்காது.
கிராமத்தில் ஆடு, மாடு மேய்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். மக்களுக்கு சேவை செய்ய அவர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை நாங்கள் மறக்கவில்லை.
அம்பேத்கரும், அரசியல் சாசனமும் இல்லாவிட்டால் அமித்ஷா உள்துறை அமைச்சராக இருந்து, மகாத்மா காந்தியை அவமதிக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.