'ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பர்'
'ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பர்'
ADDED : மார் 27, 2025 12:47 AM

லக்னோ : ''ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பர். உத்தர பிரதேசத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர்,'' என, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், உ.பி., முதல்வருமான யோகி ஆதித்யநாத் நேற்று அளித்த பேட்டி:
நுாறு ஹிந்து குடும்பங்களுக்கு மத்தியில், ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். அனைத்து மத பழக்க வழக்கங்களையும் சுதந்திரமாக பின்பற்ற முடியும்.
ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில், 50 ஹிந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா... நிச்சயம் முடியாது.
அதற்கு தற்போது, வங்கசேதம் உதாரணம். முன், பாக்., உதாரணமாக இருந்தது. நாம் தாக்கப்படுவதற்கு முன், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
உ.பி.,யில், 2017ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த வகுப்புவாத கலவரங்களும் நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், அவர்களும் பாதுகாப்பாக இருப்பர்.
உலகின் மிகவும் பழமையான மதம் மற்றும் கலாசாரம் சனாதனம். அதை பின்பற்றுபவர்கள், மற்றவர்களை தங்களுடைய மதத்துக்கு மாற்றுவதில்லை. உலகில் ஹிந்து ஆட்சியாளர்கள் யாரும் தங்களின் பலத்தை பயன்படுத்தி, யார் மீதும் ஆதிக்கம் செலுத்திய உதாரணம் இல்லை.
காங்., - எம்.பி., ராகுலின், 'பாரத் ஜோடோ யாத்திரை' என்பது, 'பாரத் தோடோ யாத்திரை'. அதாவது, நாட்டை பிளவுபடுத்தும் பிரசாரம். வெளி நாடுகளுக்கு சென்று, நம் நாட்டை ராகுல் விமர்சிக்கிறார். அவரது நோக்கம் என்னவென்று, நாட்டு மக்களுக்கு தெரியும். பா.ஜ.,வின் பாதையை தெளிவுபடுத்த ராகுல் உதவுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.