இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாக்., நான்கு துண்டுகளாகி இருக்கும்
இந்திய கடற்படை களமிறங்கி இருந்தால் பாக்., நான்கு துண்டுகளாகி இருக்கும்
ADDED : மே 31, 2025 01:14 AM

ஐ.என்.எஸ்., விக்ராந்தில் ராஜ்நாத் சிங் பேச்சு
பணஜி: ஆப்பரேஷன் சிந்துாரில் நம் கடற்படையும் களம் இறங்கி இருந்தால், பாகிஸ் தான் நான்கு துண்டுகளாகி இருக்கும் என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதி கள் முகாம்களை நம் படையினர் தகர்த்ததால், அவர்களுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் போர் தொடுத்தது.
ஆலோசனை
இதையடுத்து, நம் படையினர், பாக்.,கின் விமானப்படை தளங்களை ஏவுகணை, ட்ரோன்களால் சின்னாபின்னமாக்கினர். அப்போது, ஐ.என்.எஸ்.விக்ராந்த் தலைமையில், நம் போர்க்கப்பல்கள் அரபிக்கடலில் தயார் நிலையில் இருந்தன. இதனால், போர் நிறுத்தம் செய்வதாக பாக்., ஓடி வந்தது.
மொத்தம் 45,000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பல், 2022ல், கடற்படையுடன் இணைக்கப்பட்டது. ரபேல், மிக் 29 கே உள்ளிட்ட போர் விமானங்களை இந்த கப்பலில் இருந்து இயக்க முடியும்.
இந்தியாவிலேயே தயாரான ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சென்றார்.
அரபிக்கடலில் இருக்கும் அந்த கப்பலுக்கு, கோவாவின் பணஜியில் இருந்து சென்ற அவர், அதில் பணியாற்றும் நம் வீரர்கள், கடற்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அவர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த 96 மணி நேரத்துக்குள், நம் கடற்படை போர்க்கப்பல்கள், ஏவுகணை சோதனைகளை நடத்தின.
அதிர்ஷ்டசாலி
தரையில் இருந்து தரைக்கு, தரையில் இருந்து வானுக்கு என, அடுத்தடுத்து நடந்த சோதனைகள், நம் போர் தயார் நிலையை நிரூபித்ததோடு, எதிரியை தற்காப்பு சூழலுக்கு தள்ளியது. ஆப்பரேஷன் சிந்துார் ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கையில், நம் கடற்படையின் பங்கு மகத்தானது.
பாக்.,கில் பயங்கரவாத தளங்களை அழித்தபோதும், விமானப்படை தளங்களை தகர்த்தபோதும் அரபிக்கடலில் விழிப்புணர்வுடனும் ஆக்ரோஷத்துடனும் இருந்த கடற்படையின் பணி ஒப்பிட முடியாதது.
அதனால் தான், பாக்., கடற்படை, அதன் சொந்த கரையிலேயே நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நம் கடற்படையினர் தாக்குதலில் ஈடுபடாத போதிலும், அவர்களால் தைரியமாக கடலுக்குள் வர முடியவில்லை.
கடந்த, 1971ல் நம் கடற்படை களமிறங்கியபோது பாக்., இரண்டு துண்டு களானது. தற்போது, ஆப்பரேஷன் சிந்துாரில் கடற்படை களமிறங்கி இருந்தால், பாக்., நான்கு துண்டுகளாகி இருக்கும்.
நம் கடல் எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வரும் கடற்படையின் இந்த பணியானது, ஆப்பரேஷன் சிந்துாரின் ஒரு பகுதியாகவும் இருந்திருந்தால், பாகிஸ்தானுக்கு என்ன நடந்திருக்கும் என சொல்லத் தேவையில்லை.
நம் கடற்படை களம்இறங்காததால், பாகிஸ்தான் மிகவும் அதிர்ஷ்டசாலி.
இவ்வாறு அவர் பேசினார்.