தமிழர்களுக்கு பிரச்னை வந்தால் முன்னின்று தீர்த்து வைக்க முடிவு
தமிழர்களுக்கு பிரச்னை வந்தால் முன்னின்று தீர்த்து வைக்க முடிவு
ADDED : அக் 21, 2024 12:29 AM

மாநாட்டு நிறைவு விழாவில், தாய்மொழி கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் பேசியதாவது:
கன்னடர் - தமிழர் ஒற்றுமை மற்றும் கலாசார மாநாட்டுக்காக, ஆறு மாதங்களாக உழைத்தோம். 80 வயதிலும் பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், கர்நாடக பள்ளி, கல்லுாரிகள் தமிழ் ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்செயனும் உறுதுணையாக இருந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, தமிழர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று, வெற்றி பெற செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட எம்.எல்.ஏ.,க்கள் வந்ததற்கு நன்றி.
இந்த மாநாடு கர்நாடக வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.
நம்மை யார் எதிர்த்தார்களோ, வசைபாடினார்களோ, அவர்களே மாநாட்டுக்கு வந்து, கன்னடர்களும் தமிழர்களும் ஒன்றே என்று கூறி, பெருமைப்படுத்தி உள்ளனர்.
சிதறிக் கிடந்த தமிழர்கள், ஒன்று திரண்டனர். நம்மை ஒன்று சேர்க்க முடியாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், மாநாடு மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீண்டும் ஒரு முறை மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, மாவட்ட வாரியாக தமிழர்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். மாவட்ட அளவில் மாநாடும் நடத்தப்படும்.
தமிழர்களுக்கு பிரச்னை வரும்போது, முன்னின்று தீர்த்து வைக்கப்படும். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் நன்றி கூறினார்.
காலை 10:00 மணிக்கு துவங்கிய மாநாடு, இரவு 7:00 மணிக்கு நிறைவடைந்தது.