என்னை குறி வைத்தால் தேசத்தையே உலுக்குவேன்: எஸ்ஐஆர் எதிர்ப்பு பேரணியில் மம்தா ஆவேசம்
என்னை குறி வைத்தால் தேசத்தையே உலுக்குவேன்: எஸ்ஐஆர் எதிர்ப்பு பேரணியில் மம்தா ஆவேசம்
ADDED : நவ 25, 2025 05:08 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் என்னை குறி வைத்தால், நான் தேசத்தையே உலுக்குவேன் என்று எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிரான பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறார். எஸ்ஐஆர் மூலமாக உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந் நிலையில் போங்கான் பகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக திரிணமுல் காங்கிரஸ் பேரணியில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். பேரணியின் முடிவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசியதாவது;
ரயில்கள், விமானங்கள், எல்லைகள் போன்றவற்றை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது. பாஸ்போர்ட், சுங்கம் மற்றும் கலால் வரி அனைத்தையும் மத்திய அரசு கவனித்துக் கொள்கிறது. மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தினரை நாங்கள் எப்படி ஊடுருவச் செய்ய முடியும்?
பீஹார் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜ விளையாட்டைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் அவர்களின் விளையாட்டை புரிந்துகொள்கிறோம். அவர்களின் ஆட்டம் மேற்கு வங்கத்தில் வெற்றி பெறாது. மேற்கு வங்கத்தை அவர்கள் தொட முயற்சித்தால், நாங்கள் முழு நாட்டையும் உலுக்குவோம்.
எஸ்ஐஆர் காரணமாக 35 பேர் இறந்துள்ளனர்.செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி போலி வாக்காளர்களை உருவாக்குகிறார்கள். இது பாஜவின் புதிய திட்டம். எஸ்ஐஆரை நாங்கள் எதிர்க்கவில்லை. கடைசியாக இந்த பணிகள் 2002ல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உண்மையான வாக்காளர்களை நீக்க முடியாது என்று நாங்கள் கூறுகிறோம். தேர்தல் கமிஷனின் பணிகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும்.
இந்த வாக்காளர் பட்டியலின்படி பிரதமர் மோடிக்கு 2024ல் வாக்குகள் விழுந்தன. பெயர்களை நீக்கினால், மத்திய அரசும் நீக்கப்படும். ஏன் அவசரமாக எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது?
நான் இங்கே இருக்கும் வரை, அவர்கள்(பாஜ அரசு) உங்களை (பட்டியலில் இருந்து) வெளியேற்ற அனுமதிக்கமாட்டேன். நான் பாஜவை பார்த்து பயப்படவில்லை.
இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

