சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிவீர்கள்: பவன் கல்யாண்
சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிவீர்கள்: பவன் கல்யாண்
ADDED : அக் 04, 2024 12:33 AM

திருப்பதி: ''சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. அதை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவர்,'' என, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினார்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திருப்பதியில் நேற்று, ஜனசேனா தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லட்டு கலப்படம் தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை. ஆனால் முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தை குற்றம் சாட்டுகிறேன்.
லட்டு கலப்படம் என்பது ஒரு பெரிய பனிப்பாறையின் சிறிய முனை. முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
'சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை ஒழிக்க வேண்டும்' என, தமிழகத்தின் இளம் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது.
அதை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள் தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய் விட்டனர். ஆனால், சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, 'மலேரியா, டெங்கு போல, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்' என்றார். இதற்கு பா.ஜ.,வினர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

