பொய் வித்தை வேண்டுமானால் தி.மு.க.,விடம் கேளுங்கள்: பா.ஜ.,
பொய் வித்தை வேண்டுமானால் தி.மு.க.,விடம் கேளுங்கள்: பா.ஜ.,
ADDED : நவ 15, 2025 12:58 AM

சென்னை: 'பீஹார் தோல்விக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை கை காட்டலாம் என, யோசித்தால், அதை கைவிடவும். அம்மாநிலத்தில், சிறப்பு திருத்த பணியால், முதல் முறையாக, 71.60 சதவீத பெண் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்' என, 'இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.
தமிழக பா.ஜ., அறிக்கை:
ஒவ்வொரு முறை தேர்தலில் தோற்கும் போதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை போலியாக குறைகூறி வந்த 'இண்டி' கூட்டணியினர் பீஹார் தேர்தல் தோல்விக்குப் பின், புளித்து போன பொய்யை, இன்றைய ஏ.ஐ., காலத்திலும் கூற முன் வரக்கூடாது.
ஒரு வேளை தேர்தல் கமிஷனின் வழக்கமான நடைமுறையான, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, தோல்விக்கு கை காட்டலாம் என யோசித்தால், அதை கைவிடுங்கள்.
ஏனெனில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால், ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன எனும் இண்டி கூட்டணி பொய்யை தவிடுபொடியாக்கும் வகையில், பீஹாரில் 71.60 சதவீத பெண் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.
இனியும் ஓட்டு திருட்டு என்னும் நமத்து போன உருட்டை 'இண்டி' கூட்டணியினர் கொண்டு வர வேண்டாம்.
இனியாவது, தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை என்றால், திசை திருப்பும் பொய்யை கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,விடம் கேளுங்கள். பொய் வித்தையில், அவர்களை மிஞ்ச ஆளில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

