டிஜிட்டல் கைது மூலம் ரூ.9 கோடி மோசடி: முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது
டிஜிட்டல் கைது மூலம் ரூ.9 கோடி மோசடி: முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது
ADDED : நவ 15, 2025 01:20 AM
டேராடூன்: டிஜிட்டல் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு, 9 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியை, உத்தரகண்ட் அதிரடிப்படை போலீசார் பெங்களூரில் கைது செய்தனர்.
உத்தரகண்டின் டேராடூனைச் சேர்ந்த நபர் ஆன்லைன் மோசடி குறித்து அங்குள்ள போலீசில் புகார் அளித்தார். அதில், மர்ம நபர்கள் சிலர் டிஜிட்டல் கைது செய்து தன்னிடம் ஆன்லைன் மூலம், 59 லட்சம் ரூபாயை பறித்ததாக கடந்த ஆகஸ்டில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், மோசடியில் இழந்த 41 லட்ச ரூபாய் பணம், ஆக., 30 ல் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஜி.ஏ.கே., என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின், 'யெஸ் பேங்க்' கணக்கில் செலுத்தப்பட்டது தெரியவந்தது.
அந்த வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் போன், கிரண் குமார் என்பவருக்கு சொந்தமானது. ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட ஆவணங்களை காட்டி பெங்களூரின் யெலஹங்காவை சேர்ந்த கிரண் குமார், 31, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய உத்தரகண்ட் அதிரடிப்படை போலீஸ் எஸ்.பி., நவநீத் சிங் கூறியதாவது:
சி.பி.ஐ., மற்றும் மும்பை போலீசார், அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி கிரண்குமார், கூட்டாளிகளுடன் சேர்ந்து மர்மநபர்களை, 'வாட்ஸாப்'பில் டிஜிட்டல் கைது செய்துள்ளனர். டேராடூன் மற்றும் நைனிடால் மாவட்டங்களில் டிஜிட்டல் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு, 87 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் செலுத்த வைத்துள்ளனர்.
இவ்வாறு, 9 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நாடு முழுதும், 24 புகார்கள் கிரண்குமார், கூட்டாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ள ராஜேஸ்வரி ராணிக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மோசடி முக்கிய குற்றவாளியான கிரண் குமாரை கைது செய்ததன் மூலம், சைபர் மோசடி முறியடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

