தோற்றுப்போனால் மட்டும் ஓட்டு இயந்திரம் மோசமா: கேட்டது சுப்ரீம் கோர்ட்
தோற்றுப்போனால் மட்டும் ஓட்டு இயந்திரம் மோசமா: கேட்டது சுப்ரீம் கோர்ட்
ADDED : நவ 26, 2024 05:39 PM

புதுடில்லி: மின்னணு ஓட்டு இயந்திரத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், ' வெற்றி பெற்றால் இயந்திரம் சரியாக உள்ளது. தோல்வியடைந்தால் இயந்திரம் மோசம் எனக்கூறுவீர்களா' எனக் கேள்வி எழுப்பியது.
நன்கொடையாளர் பால் என்பவர் , இந்தியாவில் தேர்தலில் மின்னணு ஓட்டு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு பதில் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். தேர்தலின் போது, பணம் , மதுபானம் விநியோகம் செய்பவர்களை 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.பி.வராலே அமர்வு விசாரணை நடத்தியது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்: இந்த பொது நல மனுவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் நீதிபதிகள் என 180 பேர் ஆதரவு தெரிவிக்கின்றனர். நான் சர்வதேச அமைதி அமைப்பின் தலைவராக உள்ளேன். அனாதைகள், விதவைகளை மீட்டுள்ளேன்.
நீதிபதிகள்: அப்படி இருக்கையில் அரசியல் விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன?
மனுதாரர்: இந்த விவகாரம் அரசியல் ரீதியிலானது கிடையாது. 155 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். ஒவ்வொரு நாட்டிலும் ஓட்டுச்சீட்டு முறை தான் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து ஜனநாயக நாடுகளிலும் இந்த முறை தான் உள்ளது. சர்வாதிகார நாடுகள் தவிர. அவர்கள் தேர்தலை விரும்புவது கிடையாது. நாங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம். அரசியல் சட்டப்பிரிவு 14, 19,21 ஆகியவை மீறப்படுகின்றன. இன்று அரசியலமைப்பு தின நாள்.
நீதிபதிகள்: இந்த விவகாரத்தை முக்கியமான நாளில் தான் விசாரணை நடத்துகிறோம்.
மனுதாரர்: ஆக.,8 ல் டில்லியில் நடந்த கூட்டத்தில் 18 கட்சிகள் கலந்து கொண்டனர். அப்போது உலகில் 197 நாடுகளில் 180 நாடுகள் பின்பற்றும் ஓட்டுச்சீட்டு முறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.
நீதிபதி விக்ரம் நாத்: உலகின் மற்ற நாடுகளில் இருந்து ஏன் இந்தியா வித்தியாசமானதாக இருக்கக்கூடாது.
மனுதாரர்: இதில் ஊழல் நடக்கிறது.
நீதிபதி விக்ரம் நாத்: ஊழல் ஏதும் நடக்கவில்லை. ஊழல் நடக்கிறது என யார் கூறினார்கள்?
மனுதாரர்: இந்தாண்டு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம், ஒரு பில்லியன் டாலர்கள், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் கூறியுள்ளது. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன.. தேர்தல் ஆணையர்களை சந்தித்து இது குறித்த ஆதாரங்களை நான் ஏற்கனவே வழங்கி உள்ளேன். அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் பதிலளிக்க உத்தர விடவேண்டும்.
நீதிபதி விக்ரம் நாத்: இந்த அமைப்பில், அரசியல் கட்சிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்களுக்கு மட்டுமே பிரச்னை.
மனுதாரர் : காங்கிரஸ், பாஜ., உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகளுக்கு தொழில் அதிபர் ஒருவர் , 12 ஆயிரம் கோடி பணம் கொடுத்தார். சமீபத்தில் நடந்த தேர்தலில் மாபியாக்கள் இருந்தனர். மின்னணு ஓட்டு இயந்திரம் விவகாரம் தொடர்பாக சுப்ரமணியன் சாமி தொடர்ந்த பொது நல வழக்கை கோர்ட் விசாரித்து உள்ளது. எங்கள் மாநாட்டில் எலான் மஸ்க் கலந்து கொண்டார். மின்னணு ஓட்டு இயந்திரத்தை சேதப்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார். 2018ல் இதனையே சந்திரபாபு நாயுடு கூறினார். தற்போது ஜெகன் மோகன் கூறியுள்ளார். மின்னணு ஓட்டு இயந்திரத்தில் திருத்தம் செய்து மோசடி செய்ய முடியும் என அவர்கள் தெரிவித்த அறிக்கைகளை இணைத்துள்ளேன்
நீதிபதி விக்ரம்நாத்: நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் மின்னணு ஓட்டு இயந்திரம் சரியானது; தோல்வியடைந்தால், மின்னணு ஓட்டு இயந்திரம் மோசம் என்பீர்களா? சந்திரபாபு நாயுடு தோல்வியடைந்த போது இயந்திரம் மோசம் என்று கூறினார். தற்போது ஜெகன்மோகன்ரெட்டி அப்படி சொல்கிறார் எனக்கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.