ADDED : செப் 21, 2024 11:22 PM
பேட்ராயனபுரா: காரை ஒழுங்காக ஓட்டிச் செல்லும்படி அறிவுரை கூறிய, கிழக்கு மண்டல ஐ.ஜி., ரமேஷ் பானுத் மகனை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
கர்நாடகாவில் கிழக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருப்பவர் ரமேஷ் பானுத். இவரது மகன் ஸ்ரீ சாய் பிரித்தம், 30. வக்கீல். நேற்று முன்தினம் இரவு பெங்களூரு பேட்ராயனபுரா பகுதியில் காரில் சென்றார்.
அப்போது அவரது காரை உரசுவது போல், இன்னொரு கார் வேகமாகச் சென்றது. அந்தக் காரை ஓட்டிச் சென்றவர்கள் தாறுமாறாக சென்றனர்.
இதனால் அந்த காரை ஸ்ரீ சாய் பிரித்தம் முந்திச் சென்றார். “காரை ஒழுங்காக ஓட்டுங்கள்,” என அறிவுரை கூறினார். பின், பேட்ராயனபுரா சிக்னலில், தன் காரை ஸ்ரீ சாய் நிறுத்தியபோது, மற்றொரு காரில் வந்தவர்கள், ஸ்ரீ சாயிடம் தகராறு செய்தனர். அவரை தாக்கிவிட்டுத் தப்பினர்.
இதுகுறித்து பேட்ராயனபுரா போக்குவரத்து போலீசில் அவர் புகார் செய்தார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் சாலையில் இது போன்ற பிரச்னைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இப்போது ஐ.ஜி., மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.