வாகன உதிரி பாகங்களை இனி மூங்கிலில் செய்யலாம் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யினர் அசத்தல்
வாகன உதிரி பாகங்களை இனி மூங்கிலில் செய்யலாம் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யினர் அசத்தல்
ADDED : ஜூலை 25, 2025 01:09 AM

குவஹாத்தி: 'பிளாஸ்டிக்'கிற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்திய மூங்கில் ரகத்தைப் பயன்படுத்தி, அதிக திறன் உடைய வாகன உதிரிபாகங்களை உருவாக்கி, அசாமின் குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வாகனங்களின் உட்புற வடிவமைப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, நான்கு வித மூங்கில்களின் கலவையை, உயிரி அல்லது பெட்ரோலியம் அடிப்படையிலான பசைப்பொருளுடன் சேர்த்து, வேதியியல் வினைபுரிந்ததில் பாலிமர் போன்ற மூலப் பொருள் உருவாக்கப்பட்டது.
அதை பயன்படுத்தி, வாகன உதிரிபாகங்களை ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். வாகனங்களின் டேஷ்போர்டு, டோர் பேனல் மற்றும் சீட் பின்புறம் உள்ளிட்டவற்றில் இதை பயன்படுத்தலாம்.
கிட்டத்தட்ட 17 விதமான தரப்பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அதிக வலிமை, உயர் வெப்பநிலையில் தாக்குப்பிடித்தல், குறைந்தளவு ஈரப்பதத்தை தக்க வைத்தல் ஆகியவற்றோடு, மிக குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.