பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் 'உயரே' திட்டம் நிறைவு; காட்சிப்படுத்தப்பட்ட மாணவர்களின் தயாரிப்பு
பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் 'உயரே' திட்டம் நிறைவு; காட்சிப்படுத்தப்பட்ட மாணவர்களின் தயாரிப்பு
ADDED : ஜூலை 08, 2025 08:33 PM

பாலக்காடு; பழங்குடியின இளைஞர் திறன் மேம்பாட்டை நோக்கமாக கொண்டு, 'ஐ.ஐ.டி., பாலக்காடு டெக்னாலஜி ஐ ஹப் பவுண்டேஷன்' சார்பில், 'உயரே' என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் என்.எம்., -ஐ.சி.பி.ஏ.எஸ்., நிதி உதவியுடன் 'உயரே' என்ற, இளைஞர் திறன் மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த முகாமில், பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டது. பழங்குடியின மாணவர்களின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில், ஆறு மாத பயிற்சித் திட்டத்தில், 15 மாணவர்கள் பங்கேற்றனர்.
இயந்திர வடிவமைப்பு, மின்னணுவியல், நிரலாக்கம், 3-டி பிரின்டிங், ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் பேப்ரிகேஷன் ஆகிய துறைகளில் நடைமுறை அனுபவம் குறித்து முகாமில் தெரிவிக்கப்பட்டது.
பியூஷன் 360, அர்டினோ, ராஸ்பெரி பை, பைத்தன் கோடிங், இமேஜ் செயலாக்கம், பி.சி.பி., டிசைன், அடிப்படை மின்னணுவியல் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஐந்து குழுக்களாக மாணவர்கள் தயாரித்த பல்வேறு திட்டங்களின் கண்காட்சியும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் பிரியங்கா பேசுகையில்,''இந்த திட்டம், வெறும் திறன் பயிற்சி அளிப்பதை தாண்டி, மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதில் நேரடியாக கவனம் செலுத்துகிறது. நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்,'' என்றார்.
ஐ.ஐ.டி., இயக்குனர் சேஷாத்திரி சேகர், பதிவாளர் ரமேஷ், ஐ.பி.டி.ஐ.எப்., தலைமை இயக்க அதிகாரி சாய்சியாம் நாராயணன், திட்ட இயக்குனர் பேராசிரியர் விஜய் முரளிதரன், மனிதவள மேலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.