சட்ட விரோத குடியேறிகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து: துணை ஜனாதிபதி வேதனை
சட்ட விரோத குடியேறிகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து: துணை ஜனாதிபதி வேதனை
ADDED : மே 28, 2025 07:00 PM

மும்பை: 'நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய 2 கோடிக்கும் மேற்பட்டோர், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதிப்படையச் செய்துள்ளனர்,' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின் (ஐஐபிஎஸ்) பட்டமளிப்பு விழாவில், ஜக்தீப் தன்கர் பேசியதாவது: நமது எல்லையின் புனிதத்தன்மை சட்டவிரோத குடியேறிகளால் மீறப்படும்போது, அது சட்டம் ஒழுங்கு பற்றிய கேள்வி அல்ல, மாறாக நமது உயிர்வாழ்வு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாக்குகிறது.
சட்ட விரோத குடியேறிகள் நம்மிடம் இருந்து வேலையைப் பெற்று, நமது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறார்கள். பாரதம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. நமது வாழ்விற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சவால் விடுகின்றனர்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். அவர்களை நாம் சகித்துக் கொள்ள முடியுமா? நமது நாகரிகத்திற்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் மட்டுமே இந்த நாட்டில் நமக்குத் தேவை. இவ்வாறு அவர் பேசினார்