குடிசைவாசிகளுக்கு கட்டிய வீடுகள் சட்டவிரோதமாக விற்பனை: அமைச்சர்
குடிசைவாசிகளுக்கு கட்டிய வீடுகள் சட்டவிரோதமாக விற்பனை: அமைச்சர்
ADDED : அக் 12, 2024 10:44 PM
புதுடில்லி:“டில்லி மேம்பாட்டு ஆணையத்தால் ஏழைகளுக்காக கட்டப்பட்ட வீடுகள் சட்டவிரோதமாக தகுதியற்றவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது; இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்,” என, அமைச்சர் பரத்வாஜ் கூறினார்.
இதுகுறித்து, டில்லி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறியதாவது:
குடிசைவாசிகளுக்காக டில்லி மேம்பாட்டு ஆணையம் கட்டிய வீடுகளை தகுதியற்ற நபர்களுக்கு சட்டவிரோதமாக விற்றுள்ளனர். ஏழைகளுக்கு உதவும் நோக்கில் ஆணையத்தால் கட்டப்படும் வீடுகளை வசதி படைத்தோருக்கு விற்பதால் இந்த திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துள்ளனர்.
ஆணையத்தின் தலைவரான துணைநிலை கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த முறைகேட்டில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., ஏழைகளுக்கு எதிராகவே செயல்படுகிறது.
டில்லி அரசு இலவச மின்சாரம், குடிநீர் வழங்கியபோதுபா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் சுதந்திரமான நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மட்டுமே வெளிப்படையான விசாரணை நடத்த முடியும். ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் முறைகேடுகளை மூடி மறைத்து விடுவர். ஏனென்றால் இந்த விசாரணை அமைப்புகள் துணைநிலை கவர்னர் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.