ADDED : செப் 21, 2024 07:01 AM

பெங்களூரு: நடப்பாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் கூட்டணி வேட்பாளராக, குமாரசாமி களமிறங்கினார். வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், கனரக தொழிற்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
குமாரசாமி எம்.எல்.ஏ.,வாக இருந்த சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி காலியானது. இத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக டில்லிக்கு பல முறை சென்று கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்தார்.
மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்து, தனக்கு சீட் அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். சில நாட்களுக்கு முன்பும், டில்லிக்கு பறந்த யோகேஸ்வர், கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார்.
சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், தனக்கு சீட் அளிக்கும்படி கோரினார். ஆனால் சீட் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே எரிச்சலடைந்த அவர், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவும் தயாராவதாக, தகவல் வெளியானது.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எதிர்க்கட்சித் தலைவர் அசோக், துணைத்தலைவர் அரவிந்த் பெல்லத் உட்பட, முக்கிய தலைவர்கள், யோகேஸ்வரை சமாதானம் செய்தனர். கட்சியை விட்டு விலக வேண்டாம் என, கேட்டுக்கொண்டனர்.
யோகேஸ்வர் பா.ஜ.,வை விட்டுச் செல்வதைத் தடுக்க, அவருக்கு மத்தியில் முக்கியமான கார்ப்பரேஷன், வாரிய தலைவர் பதவி வழங்கும்படி மேலிடத்திடம், மாநில தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர் சுயேச்சையாக நின்றால், கூட்டணி கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்படும். இவர் மனதை மாற்றி, கார்ப்பரேஷன், வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு மேலிடமும் ஒப்புதல் அளித்ததாக தெரிய வந்துள்ளது. மத்திய பட்டு வாரியம், ரயில்வே உட்பட முக்கியமான கார்ப்பரேஷன், வாரியங்களில் யோகேஸ்வருக்கு தலைவர் பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.