காங்கிரஸ் கட்சி வங்கிக்கணக்கு முடக்கம்: சிறிது நேரத்தில் விடுவிப்பு: வருமான வரித்துறை நடவடிக்கை
காங்கிரஸ் கட்சி வங்கிக்கணக்கு முடக்கம்: சிறிது நேரத்தில் விடுவிப்பு: வருமான வரித்துறை நடவடிக்கை
ADDED : பிப் 16, 2024 12:46 PM

புதுடில்லி: தேர்தல் நெருங்கும் நேரத்தில், இளைஞர் காங்கிரஸ் உட்பட காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றம்சாட்டினார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வங்கிக்கணக்குகள் விடுவிக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பொது மக்களிடம் இருந்து நிதி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட வங்கிக்கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு, இளைஞர் காங்கிரசின் வங்கிக்கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயக நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ரூ.210 கோடி வரி பாக்கிக்காக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இது அரசியல் ரீதியானது. காங்கிரசின் தேர்தல் நடவடிக்கைகளை முடக்குவதற்காக எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ மோடி பயப்பட வேண்டாம். சர்வாதிகாரத்திற்கு நாங்கள் தலைகுனிய மாட்டோம். காங்கிரஸ் பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல. மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி'' என தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸ் தலைவர் கார்கேயும், வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என விமர்சனம் செய்திருந்தார்.
பிறகு காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ததாகவும், இதன் பிறகு முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.