'முடா' வழக்கில் 8 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறை அதிரடி
'முடா' வழக்கில் 8 இடங்களில் 'ரெய்டு' அமலாக்க துறை அதிரடி
ADDED : அக் 29, 2024 02:35 AM
பெங்களூரு, 'முடா' முறைகேடு தொடர்பாக, பெங்களூரு, மைசூரு உட்பட எட்டு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில், 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, லே- - அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன. நிலம் கொடுத்தவர்களுக்கு 50 சதவீத பணம்; 50 சதவீத இடம் ஒதுக்கப்படுகிறது.
இந்த வகையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. முடா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்றமும் நடந்ததாக, அமலாக்கத் துறையில், மைசூரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கங்கராஜு புகார் செய்தார்.
இதையடுத்து, கடந்த 18, 19ம் தேதிகளில் மைசூரு முடா அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
முடா முறைகேட்டில், நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷின் தீவிர ஆதரவாளரான மஞ்சுநாத் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கங்கராஜு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு ஜே.பி., நகரில் உள்ள மஞ்சுநாத் வீடு, அலுவலகத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுபோல, முடா முன்னாள் கமிஷனர்கள் தினேஷ்குமார், நடேஷ் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, மாண்டியா, மங்களூரு உட்பட எட்டு இடங்களில் முடா முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றினர்.
இதற்கிடையில், நேற்று காலை பெங்களூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு, புகார்தாரர் கங்கராஜு வந்தார். அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகி, சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
முடா முறைகேடு வழக்கில், என் வாயை மூடும் முயற்சி நடக்கிறது. ஆனால், எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டேன். முடா வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை விடுவதாக இல்லை.
முடா முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்தா நடத்தும் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நியாயம் கிடைக்க ஒரே வழி, சி.பி.ஐ., அமலாக்கத் துறை விசாரணை மட்டும்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.