வேலை வாய்ப்பை உருவாக்கினால் ஊக்கத்தொகை; மத்திய அரசு திட்டம்
வேலை வாய்ப்பை உருவாக்கினால் ஊக்கத்தொகை; மத்திய அரசு திட்டம்
ADDED : ஆக 19, 2025 08:03 AM

புதுடில்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில், தனியார் துறையில் 3.50 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்கான 'பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்ஹர் யோஜனா' திட்டத்தை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
கடந்த 15ம் தேதி, நாட்டின் சுதந்திர தின உரையின் போது, பிரதமர் மோடி, 'நாட்டின் இளைஞர்களுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் செலவில், புதிய வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; இத்திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில், நாட்டில் 3.50 கோடி புதிய வேலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
தனியார் துறையில் 3.50 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிக்க முயற்சி
முதல்முறை வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்கள், அதிக வேலைகளை உருவாக்கும் நிறுவனங்கள் என, இரு தரப்பினரையும் ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், 2025, ஆக., 1, முதல் வரும் 2027, ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும். இதற்கான, பிரத்யேக போர்ட்டலை பிரதமர் மோடி நேற்று துவங்கி வைத்தார்.
இது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட் வியா தெரிவித்துஉள்ளதாவது: இரண்டு பகுதிகளாக அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில், பகுதி - ஏ என்பது முதல் முறை பணியாளர்களுக்கு, அடிப்படை சராசரி மாத சம்பளத்தில் இருந்து 15,000 ரூபாய் வரை, ஒருமுறை ஊக்கத்தொகை, இரண்டு தவணைகளாக செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.