ADDED : அக் 04, 2025 08:30 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் கலால் துறை வருமானம் கடந்த ஆண்டை விட, 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் கலால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2024 - 20-25 நிதியாண்டில் ஏப்ரல் - -செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில், 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி உட்பட கலால் துறையின் வருவானம் 3,731.79 கோடி ரூபாயாக இருந்தது.
இதுவே, இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டில் 4,192.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தக் கணக்கீடு செப்டம்பர் 16ம் தேதி வரையிலானது என்பது அடுத்த 14 நாட்களின் மது விற்பனையையும் கணக்கிட்டால் மேலும் அதிகரிக்கும்.
தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதால், இந்த நிதியாண்டுக்கு வருவாய் இலக்காக நிர்ணயித்துள்ள 6,000 கோடி ரூபாயையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகை கால விற்பனைக்கு தேவையான மது பாட்டில் இருப்பை தயாராக வைத்திருக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் 700க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனை நிலையங்கள் நகரில் செயல்படுகின்றன.
பட்ஜெட்டில், 2025- - 2026 நிதியாண்டுக்கான கலால் வரி வருவாய் இலக்கு 7,000 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின், விற்பனை தொடர்பான மதிப்பீடு களைக் கருத்தில் கொண்டு 6,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தலைமையிலான உயர்நிலைக் குழு, புதிய கலால் கொள்கையை உருவாக்கி வருகிறது.
புதிய கொள்கை வாயிலாக கலால் வருவாயை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய கொள்கை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். நுகர்வோர் நலன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடியதாக இந்தக் கொள்கை வடிவமைக்கப்படும்.
புதிய கொள்கையின் வரைவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் கலால் வரி 2014ம் ஆண்டுக்குப் பின் உயர்த்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன், சில்லறை விற்பனை விலை மற்றும் உயர்த்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.