வாணி விலாஸ் மருத்துவமனையில் சிகிச்சை தாய், சேய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
வாணி விலாஸ் மருத்துவமனையில் சிகிச்சை தாய், சேய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : டிச 11, 2024 11:51 PM

பெங்களூரு : பெங்களூரின் மிகவும் பிரபலமான அரசு மருத்துவமனைகளில், வாணி விலாஸ் மகப்பெறு மருத்துவமனையும் ஒன்று. கே.ஆர்.மார்க்கெட் அருகில் உள்ள இம்மருத்துவமனை, பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. கர்நாடகாவின் மிகப்பெரிய தாய், சேய் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்தர சிகிச்சை
மகப்பேறு, பெண்கள் சம்பந்தப்பட்ட நோய், குழந்தைகள் சிகிச்சை பிரிவுகள் கொண்டுள்ளன. அதி நவீன பச்சிளம் குழந்தைகள் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகள் இங்குள்ளன. சிறப்பு மருத்துவ வல்லுனர்களும் உள்ளனர். உயர்தரமான சிகிச்சை கிடைக்கிறது.
இதனால், இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, டாக்டர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதுகுறித்து அம்மருத்துவமனை அதிகாரி டாக்டர் சவிதா கூறியதாவது:
சிறப்பு மகப்பேறு வல்லுனர்கள் இல்லாதது, தேவையான மருத்துவமனையில் தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாதது என, பல காரணங்களால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெண்கள், கர்ப்பிணியர், சிகிச்சைக்காக வாணி விலாஸ் மருத்துவமனைக்கு, சிபாரிசு செய்யப்பட்டு வருகின்றனர்.
வெளி நோயாளிகள் பிரிவுக்கு, தினமும் சராசரியாக 250 முதல், 300 பேர் வருகின்றனர். 'ஆயுஷ்மான் பாரத்' உட்பட வெவ்வேறு திட்டங்களின் கீழ், தாய், சேய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து வரும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
பல மாவட்டங்கள்
ஜெயநகர் பொது மருத்துவமனை, கே.சி.ஜெனரல் உட்பட பெங்களூரின் பல மருத்துவமனைகள், கோலார், துமகூரு, ராம்நகர், சிக்கமகளூரு என, பல மாவட்டங்களில் இருந்தும் கூட வாணி விலாஸ் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர்.
பலரும் அதிக ரத்த அழுத்தம், இதய பிரச்னை, ரத்த போக்கு, கர்ப்பப்பையில் பிரச்னை என, பல பிரச்னைகள் உள்ளவர்கள் அதிகம் வருகின்றனர். உள் நோயாளிகளில் 60 சதவீதம் பேர், சிபாரிசு அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டவர்கள். எனவே குழந்தை பெற்ற பெண்களுக்கு படுக்கை வசதி செய்து, சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது.
பச்சிளம் குழந்தைகளும் கூட, சிபாரிசு அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் 30 சதவீதம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்தவைகளாகும். எடை குறைவு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளுக்கும் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகின்றன.
மருத்துவமனைக்கு வரும் தாய், சேய் எண்ணிக்கை அதிகரிப்பதால், படுக்கைகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே 160 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களில் பணிகள் முடிவடையும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.