கார்ப்பரேட் கம்பெனி போன்று செயல்படுகிறது அறநிலைய துறை: ஐகோர்ட் மதுரை கிளை
கார்ப்பரேட் கம்பெனி போன்று செயல்படுகிறது அறநிலைய துறை: ஐகோர்ட் மதுரை கிளை
ADDED : ஆக 04, 2025 06:00 AM

மதுரை: 'ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் கம்பெனி போல அறநிலைய துறை செயல்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை விமர்சித்தது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கில், நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த இறுதி உத்தரவு:
தமிழகத்தின் பல கோவில்களில் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் கம்பெனி போல அறநிலைய துறை செயல்படுகிறது.
இதனால், கோவில் நிர்வாகமும் கும்பாபிஷேக தேதியை முன்கூட்டியே முடிவு செய்து புனரமைப்பு பணிகளை அவசரகதியில் செய்கின்றன.
இதுபோன்ற இலக்குகளால் கும்பாபிஷேகத்தின் உண்மையான நோக்கம் சிதைகிறது. கோவில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல; குடியிருக்கும் தெய்வங்களின் அங்கம். அதை உணர்ந்து அறநிலைய துறை செயல்பட வேண்டும்.
புனரமைப்பு பணிகள் துவங்கும் முன், சென்னை ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையிடம் கோவிலில் உள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெற வேண்டும்.
புனரமைப்பு பணிகளின் போது கனரக இயந்திரங்களை தவிர்த்து, அத்துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள், ரசாயனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். பணிகள் முடிந்த பின் அத்துறையிடம் தகுதிச்சான்று பெற வேண்டும்.
பின், கட்டமைப்பு பொறியியல் நிபுணர், தொல்பொருள் நிபுணர், பாதுகாப்பு நிபுணர், பாரம்பரிய ஸ்தபதி, இரு ஆகம நிபுணர்கள் அடங்கிய மாநில நிபுணர் குழுவிடம் பணி முடிந்ததற்கான சான்று பெற வேண்டும்.
கோவிலில் அவற்றை பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் பின்னரே நாள் குறித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
நன்கொடையாளர் சார்பில் நடத்தும் புனரமைப்பு பணிகளை, மாநில நிபுணர் குழு கண்காணிக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

