ADDED : அக் 27, 2024 11:17 PM

ஹாசன்: ஹாசனின், ஹாசனாம்பா தேவியை தரிசிக்க, அரசியல்வாதிகள், பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர்.
ஹாசனில் அமைந்துள்ள ஹாசனாம்பா கோவில் கதவு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். 10 நாட்கள் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
இம்மாதம் 24ம் தேதி, கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் துப்புரவு பணிகள் நடந்ததால், பக்தர்கள் தரிசனத்துக்கு வாய்ப்பு இருக்கவில்லை.
மறுநாள் வாய்ப்பளித்ததால், பக்தர்கள் திரண்டு வருகின்றனர். அரசியல்வாதிகள், மடாதிபதிகள், முக்கிய புள்ளிகள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள், ஹாசனாம்பாவை தரிசித்தனர்.
இரண்டு நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
ஹாசனாம்பாவை தரிசிக்க ஆன்லைன் செயலி வழியாக டிக்கெட் புக்கிங் செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கொச்சி, ஜம்மு - காஷ்மீர், யு.எஸ்., மலேஷியா, ருமானியா, ஜெர்மனி உட்பட வெளிமாநிலங்கள், நாடுகளில் இருந்தும் டிக்கெட் புக் செய்துள்ளனர். நவ., 3 வரை, ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி இருக்கும் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஹாசனாம்பாவை தரிசிக்க வரும் பக்தர்கள், வீடியோ கால் செய்து, வெளிநாட்டில் உள்ள தங்களின் பிள்ளைகள், உறவினர்களுக்கு ஹாசனாம்பா அலங்காரம், கோவில் அலங்காரங்களை காட்டுகின்றனர். இது வெளி மாநிலம், நாடுகளின் பக்தர்களை ஈர்க்க காரணமாகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிப்பதால், போலீசார் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
கி.மீ., கணக்கில் பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை, ஹாசன் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.